Recent Post

Wednesday, 10 September 2014

கொலை வழக்கில் கைதான பெண் போலீஸ் காவலில் சித்ரவதை என்பது பொய்: இன்ஸ்பெக்டர் மனுதாக்கல்



கொலை வழக்கில் கைதான பெண் போலீஸ் காவலில் சித்ரவதை என்பது பொய்: இன்ஸ்பெக்டர் மனுதாக்கல்
கொலை வழக்கில் கைதான பெண் போலீஸ் காவலில் சித்ரவதை என்பது பொய்: இன்ஸ்பெக்டர் மனுதாக்கல்

சென்னை, செப்.11- 

மதுரை, மேலூரை சேர்ந்தவர் பி.ராஜகுமாரி (வயது 26). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 

என்னுடைய தாயார் சந்திரா உடுமலைப்பேட்டையில் தங்கியிருந்து ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அவர் வசித்த வீட்டில் உரிமையாளர் லீலாவதியை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து உடுமலைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, என் தாயாரை கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி பிடித்து சென்று, கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். அவரை அரை நிர்வாணப்படுத்தி, தலைகீழாக தொங்க விட்டு, அடித்து உதைத்துள்ளனர். 

கை விரல்கள் நகங்களின் இடுக்கில் ஊசியை வைத்து குத்தி சித்ரவதை செய்துள்ளனர். பின்னர், என் தாயாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர். எனவே, இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். 

இவ்வாறு அதில் கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சந்திராவை நேரில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 5-ந் தேதி நீதிபதி முன்பு சந்திரா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியில் சந்திராவை சிகிச்சைக்காக சேர்க்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை தன்னுடைய அறையில் வைத்து நீதிபதி விசாரித்தார். அப்போது சந்திராவுக்கு சிகிச்சை வழங்கிய டாக்டர்கள் தங்களது அறிக்கையை முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கில் உடுமலைப்பேட்டை இன்ஸ்பெக்டர் எ.தவமணி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

மனுதாரர் ராஜகுமாரி தனது மனுவில் கூறியுள்ள அனைத்து தவறான குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். மனுதாரர் கூறியுள்ளபடி, ஆகஸ்டு 10-ந் தேதி போலீஸ் காவலில் அவரது தாயார் சந்திரா வைக்கப்படவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம். கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் ஆகஸ்டு 14-ந் தேதியன்று ஆஜராகும்வரை, சந்திராவை போலீஸ் காவலில் எடுக்கவில்லை. 

11-ந் தேதி இரவு முதல் கட்ட விசாரணையை நான் முடித்துவிட்டு, குண்டர்கள் தடுப்புக் காவல் அறிவுரைக் கழக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்துவிட்டேன். அதன் பின்னர் 13-ந் தேதி பிற்பகலில்தான் உடுமலைப்பேட்டைக்கு திரும்பினேன். சந்திரா அடித்து உதைக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, தவறாக நடத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். 

சந்திராவின் செல்போன் அணைக்கப்பட்டு இருந்ததாலும், வீட்டில் இல்லை என்பதாலும் மனுதாரரிடம் போன் மூலம் பெண் காவலர் ராஜேஸ்வரி ஆகஸ்டு 13-ந் தேதி தொடர்பு கொண்டு சந்திராவின் இருப்பிடம் குறித்து விசாரித்தார். அதுவரை நடந்த விசாரணையில், லீலாவதியை கொலை செய்ய சந்திராவுக்கு அதிக வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் அவரை விசாரிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. 

விசாரணையில் சந்தேகம் தன் மீது திரும்பும் என்று தனது மகள் வீட்டுக்கு சந்திரா சென்றிருந்தார். விசாரணைக்காக சந்திரா கிடைத்திருந்தால், மனுதாரரிடம் போன் செய்து அவரது முகவரி போன்ற விபரங்களை கேட்க வேண்டிய அவசியம் எழுந்திருக்காது. அதுமட்டுமல்ல, ஆகஸ்டு 14-ந் தேதி காலையில் மனுதாரரின் கணவனிடம் உடுமலைப்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் போன் செய்து சந்திராவின் இருப்பிடம் குறித்து விசாரித்தார். 

சந்திரா எங்களின் காவலில் இருந்திருந்தால், அதற்கு அவசியமே எழுந்திருக்காது. தனியாக வசித்து வந்த விதவைப் பெண் லீலாவதியின் தலையில் அம்மிக் கல்லைப்போட்டு கொலை செய்திருந்தனர். அவரது உடமைகள் கொள்ளை போகவில்லை. முதல் இரண்டு நாட்கள் எங்களுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. அருகில் மீன் கடை நடத்தும் ரபீக் மற்றும் மணி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டோம். மணி கொடுத்த தகவலின்படி, ஆகஸ்டு 8-ந் தேதி இரவு 8 மணிக்கு சந்திராவுக்கும் லீலாவுக்கும் சண்டை நடந்த விபரம் தெரிய வந்தது.

சந்திராவின் வீட்டுக்கு அடிக்கடி அடையாளம் தெரியாத நபர்கள் வந்து செல்வதாகவும், பகலிலேயே சந்திரா மது அருந்துவதாகவும் ஏற்கனவே லீலாவதியிடம் தான் புகார் செய்துள்ளதாக ரபீக் கூறினார். இதனால் சந்திராவை அந்த இடத்தை விட்டு விரட்ட வேண்டும், இல்லாவிட்டால் தான் காலி செய்துவிட்டு சென்றுவிடுவதாக லீலாவதியிடம் கூறியதாக ரபீக் தெரிவித்தார். அறைக்காக சந்திரா கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையையும் லீலாவதி திருப்பிக் கொடுத்துவிட்டார். ஜூலை 27-ந் தேதியன்று அறையை காலி செய்யும்படி லீலாவதி கூறியிருக்கிறார். 

சந்திராவின் மகன் அங்கு வந்தபோது, லீலாவதியை சந்திரா திட்டியிருக்கிறார். இதனால் லீலாவதிக்கும் சந்திராவுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில், ஆகஸ்டு 8-ந் தேதியன்று இரவு 10 மணிக்கு மேல் சாதிக்நகரில் உள்ள சந்திரசேகர் என்பவர் வீட்டுக்குச் சென்றதாகவும், அன்று இரவு அவர் வீட்டில் தங்கியதாகவும் சந்திரா கூறியுள்ளார். 

அறையை விட்டுச் சென்று, உறவினர் அல்லாத அந்த நபருடன் தங்கிய விவரம் பற்றி சந்திரா எதுவும் கூறவில்லை. சந்திரசேகரிடம் மேற்கொண்ட விசாரணையில், அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு மேல்தான் (9-ந் தேதி அதிகாலையில்) தனது வீட்டுக்கு சந்திரா வந்ததாக கூறினார். அப்போது சந்திரா கலக்கமடைந்தவராக இருந்ததாகவும், ஏனென்று கேட்டபோது, அறையை உடனே காலி செய்ய லீலாவதி கூறிவிட்டதாகவும் சந்திரா சொன்னதாக சந்திரசேகர் தெரிவித்தார். 

யார் யாரெல்லாமோ வீட்டுக்கு வருவதை காரணம் காட்டி லீலாவதி அப்படி கூறியதாகவும் சந்திரா சந்திரசேகரிடம் கூறியிருக்கிறார். அறையைக் காலி செய்தால் தங்க வேறிடம் இல்லை என்பதால், அன்றிரவு மட்டும் தங்க அனுமதிக்க வேண்டும் என்று சந்திரசேகரிடம் சந்திரா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அளவில் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் அளவுக்கு விசாரணை சென்று கொண்டிருக்கிறது. 

மனுதாரரிடம் தாயார் சந்திரா பேசியதாகவும், அப்போது போலீசார் தன்னை அடித்து உதைத்ததாக சொன்னதாகவும் மனுதாரர் கூறுகிறார். அப்படி போலீசார் அடித்து உதைத்துவிட்டு, மற்றவரிடம் போனில் அதுபற்றி பேசுவதற்கு அனுமதிப்பார்களா? 13-ந் தேதி காலையில் தாயாருடன் போனில் தொடர்பு கொண்டு பேசியதாக மனுதாரர் கூறுவதை வைத்தே, சந்திராவை போலீசார் சட்ட விரோதமாக அடைத்து வைக்கவில்லை என்பதை அறியலாம். 

எனவே 10-ந் தேதியில் இருந்தே போலீஸ் காவலில் சந்திரா வைக்கப்பட்டு இருந்தார் என்ற குற்றச்சாட்டு தவறானது. போலீஸ் விசாரணை தனக்கெதிராக திரும்பி விட்டது என்று உணர்ந்தும், குற்ற உணர்வாலும்தான் உடுமலைப்பேட்டை கிராம நிர்வாக அதிகாரி ராமதாஸ் முன்னிலையில் சந்திரா 14-ந் தேதி காலை 10 மணிக்கு சரணடைந்தார். லீலாவதியை கொலை செய்ததையும் அப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். அது பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 11.30 மணிக்கு விசாரணை அதிகாரியிடம் சந்திராவை கிராம நிர்வாக அதிகாரி ஒப்படைத்தார். பின்னர் பெண் போலீசார் முன்னிலையில் சந்திரா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். 

லீலாவதியை கொலை செய்த பிறகு வீட்டை பூட்டிவிட்டு, அந்தச் சாவியை தனது அறையில் உள்ள தலையணையின் கீழ் வைத்திருப்பதாகக் கூறினார். அந்த சாவியை மீட்டுள்ளோம். சந்திராவின் கை, கால்களில் காயங்கள் இருந்தன. இதை சாவித்திரி என்ற பெண் போலீஸ் சரி பார்த்தார். குடிபோதையில் ஆகஸ்டு 12-ந் தேதி கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் அவை என்று சந்திரா கூறியிருக்கிறார். டாக்டரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது, போலீசார் துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டவில்லை. அந்த காயங்கள், அவர் சரணடைவதற்கு முன்பு நேர்ந்தவை என்று டாக்டர் குறிப்பிட்டுள்ளார். 

மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த காவல் ஆணையில், ‘‘போலீஸ் பற்றி சந்திரா புகார் கூறவில்லை. அவரது கை, கால்களில் வீக்கம் உள்ளது. தொடை, பின்பகுதியில் அடிபட்ட காயம் உள்ளது. தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம். போலீசார் துன்புறுத்தினர் என்று குற்றம்சாட்டுவது முற்றிலும் தவறு என்பது புலப்படுகிறது. காவலின்போது கட்டையை சந்திராவின் அடிவயிற்றுக்குள் நுழைத்தது உண்மை என்றால், டாக்டரோ அல்லது மாஜிஸ்திரேட்டோ அந்தக் காயங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்க மாட்டார்களா? எனவே போலீசார் துன்புறுத்தினர் என்ற குற்றச்சாட்டு, எந்த வகையிலும் நம்பத்தக்கதாக இல்லை. அனைத்து குற்றச்சாட்டும் அப்பட்டமான பொய். 

அனைத்து நடவடிக்கைகளையும் சட்டத்தின் அடிப்படையிலும், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படிதான் எடுத்தேன். ஐகோர்ட்டின் உத்தரவின்படி தற்போது சிறப்பு சிகிச்சைக்கான ஆஸ்பத்திரியில் சந்திராவை சேர்த்திருக்கிறேன். அந்த ஆஸ்பத்திரியின் அறிக்கையும் நியாயத்தை உங்களுக்கு வெளிப்படுத்தும். விசாரணை கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகள் குறித்த மனுவை திரும்பப் பெறும்படி மனுதாரர் மிரட்டப்பட்டார், அதற்கு பண பேரம் பேசப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை. 

மாஜிஸ்திரேட்டின் அறைக்குச் சென்று போலீசார் பேசியதாகவும், அதன் பிறகு தனது மனுவை மாஜிஸ்திரேட்டு சாதாரண காரணத்தைக் கூறி நிராகரித்ததாகவும் கூறுவது உண்மைக்கு மாறானது. ஆனால் இந்த மனு தொடர்பாக ஐகோர்ட்டுக்கு வந்தபோது நான்தான் வக்கீல் என்று கூறிக் கொண்ட ஒருவரால் தாக்கப்பட்டேன். எனவே மனுதாரர் ராஜகுமாரியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)

No comments:

Post a Comment

Like Us

Contact Form

Name

Email *

Message *