சென்னை,
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
மதுவிலை உயர்வு
கடந்த ஆகஸ்டு 20-ந் தேதி இந்த மதுபான ரகங்களின் விலை உயர்த்தப்பட்டது. மதுவுக்கான ஆயத்தீர்வை உயர்த்தப்பட்டதால் இந்த நடவடிக்கையை அரசு அப்போது மேற்கொண்டது.
மதுபான உற்பத்தியாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. தற்போது மது உற்பத்தியில் கூடுதல் செலவு ஏற்படுவதால், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும்படி மதுபான உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை அரசு ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலையையும் அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது.
எவ்வளவு?
சாதாரண ரக மதுவின் 180 மி.லி. (குவாட்டர்) பாட்டில் விலை தற்போது ரூ.80-க்கு விற்கப்படுகிறது. அதன் விலை ரூ.8 உயர்ந்து இன்று முதல் ரூ.88-க்கு விற்பனை செய்யப்படும்.
தற்போது 160 ரூபாய்க்கு விற்கப்படும் சாதாரண மது அரை பாட்டில் விலை (ஆப்) ரூ.16 அதிகரிக்கப்பட்டு ரூ.176-க்கு விற்கப்படும். சாதாரண ரக முழு பாட்டில் (புல்) விலை 32 ரூபாய் கூட்டப்பட்டு உள்ளது. எனவே தற்போது ரூ.320 என்று விற்கப்படும் முழு பாட்டில் இனி ரூ.352 என்று விற்பனை செய்யப்படும்.
நடுத்தர ரகம்
நடுத்தர ரக மதுவின் குவாட்டர் பாட்டில் விலை ரூ.10 கூடி இருக்கிறது. இதுவரை ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நடுத்தர மது குவாட்டர் பாட்டில் இனி ரூ.100-க்கு விற்கப்படும். நடுத்தர மது அரை பாட்டில் விலை ரூ.20 உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே 180 ரூபாய் என்று இதுவரை விற்கப்பட்ட அரை பாட்டில் இனி ரூ.200-க்கு விற்பனை செய்யப்படும். நடுத்தர மது முழு பாட்டிலின் விலையில் ரூ.40 கூட்டப்பட்டு உள்ளது. அதன் விலை ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்கிறது.
உயர் ரகம்
ரூ.100 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த உயர்ரக மது குவாட்டர் பாட்டில் விலையில் ரூ.10 கூட்டப்பட்டு உள்ளது. ரூ.200 முதல் ரூ.360 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த உயர் ரக மதுவின் அரைபாட்டில் விலையில் ரூ.20 உயர்த்தப்பட்டு இருக்கிறது. ரூ.400 முதல் ரூ.720 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த உயர்ரக மது முழு பாட்டில் விலையில் ரூ.40 உயர்த்தப்பட்டு உள்ளது.
பீர் விலையும் உயர்வு
ரூ.200-க்கு அதிகமான விலை உள்ள குவாட்டர் பாட்டில்களுக்கு ரூ.20ம், ரூ.400-க்கு மேல் விலை உள்ள அரை பாட்டில்களுக்கு ரூ.40-ம், ரூ.800-க்கு மேல் விலையுள்ள முழு மது பாட்டில்களுக்கு ரூ.80-ம் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் மதுப் பிரியர்கள் விரும்பி குடிக்கும் பீரின் விலை பாட்டிலுக்கு ரூ.10 உயர்கிறது.
இந்த மது விலை உயர்வினால் தமிழக அரசுக்கு ரூ.1,000 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மது விலையின் புதிய பட்டியல், அனைவரும் பார்க்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு வெளியே ஒட்டப்படும்.
கண்காணிக்க குழு
சரியான விலையில் மது பாட்டில்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு தற்போது மாவட்டம் தோறும் 10 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நடவடிக்கைகளை சோதனையிடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொள் முதல் விலை உயர்வு
இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுவின் கொள்முதல் விலை, பெட்டிக்கு ரூ.110 உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி 48 குவாட்டர் பாட்டில்களைக் கொண்ட பெட்டி, 24 அரை பாட்டில்களைக் கொண்ட பெட்டி, 12 முழு பாட்டில்களைக் கொண்ட பெட்டி ஆகியவற்றுக்கு தலா ரூ.110 உயர்த்தப்படுகிறது. இதனால் ஒரு குவாட்டர் பாட்டில் மூலம் மது உற்பத்தியாளர்களுக்கு சுமார் ரூ.3 வரை லாபம் கிடைக்கும்.