வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் நடந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு சிறிது தூரம் ஓடினார்.
தேசிய ஒருமைப்பாட்டு தினம்
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படுபவர், சர்தார் வல்லபாய் பட்டேல். அவர், நாடு சுதந்திரமடைந்தபோது பிரிந்து கிடந்த 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒன்றாக இணைத்து நாட்டின் ஒற்றுமைக்கு வித்திட்டவர் ஆவார். அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 31-ந்தேதி தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
மேலும் பட்டேலின் 139-வது பிறந்த நாளன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமைக்கான ஓட்டமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. டெல்லியில் ராஜபாதை விஜய் சவுக்கில் இருந்து இந்தியா கேட் வரையில் இந்த ஓட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
உறுதி மொழி
தேசிய ஒற்றுமைக்கான இந்த ஓட்டம் விஜய் சவுக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காலை நடந்தது.
இதையொட்டி இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சிறுவர்களும் அதிகாலையில் இருந்தே கூடத்தொடங்கினர்.
பிரதமர் மோடி விழா மேடைக்கு சரியாக காலை 7.45 மணிக்கு வந்தார். அப்போது அங்கே கூடியிருந்தவர்கள் பாரத மாதா வாழ்க என்று உற்சாக குரல் எழுப்பி அவரை வரவேற்றனர்.
8 மணி அளவில் விழா மேடையில் இருந்தவாறே மோடி தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசிக்க அங்கே கூடியிருந்தவர்கள் அதனை திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.
அதன்பின்னர் மோடி கொடியை அசைத்து ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண்ஜெட்லி ஆகியோரும் அருகில் இருந்தனர்.
பிரதமர் ஓடினார்
அப்போது அங்கே கூடியிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீங்களும்(மோடி) இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதனால், அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மேடையை விட்டு கீழே இறங்கிய மோடி கூடியிருந்தவர்களுடன் சேர்ந்து ஓடத் தொடங்கினார். சிறிது தூரம் வரை அவர் ஓடினார்.
இதனால் அத்தனை பேரும் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக ஓடினர். இந்த ஓட்டத்தில் பிரபல விளையாட்டு வீரர்கள் சுஷில்குமார், விஜேந்தர் சிங், வீரேந்திர சேவாக், கவுதம் காம்பீர் போன்றோரும் கலந்து கொண்டு ஓடினர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் மோடி பேசும்போது 1984-ம் ஆண்டு 31-ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை வேதனையோடு குறிப்பிட்டார்.
அவர் கூறியதாவது:-
ஒருமைப்பாட்டுக்கு விழுந்த அடி
சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் ஒற்றுமைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டவர். துரதிர்ஷ்டவசமாக 30 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பிறந்த நாளன்று நமது நாட்டின் சொந்த மக்களே கொல்லப்பட்டனர்.
அப்போது நடந்த சம்பவங்கள் நமது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அடியாக விழுந்தது. இது ஒரு சமூகத்துக்கும் மட்டும் காயத்தை ஏற்படுத்தவில்லை. நாட்டில் பல நூறு ஆண்டுகளாக நம்மிடையே இருந்த வந்த ஒருமைப்பாட்டில் கத்தியை பாய்ச்சுவதைப் போல் அது அமைந்து விட்டது.
சாணக்கியம்
தனது அரசியில் வாழ்வில் எத்தனையோ தடைகளைச் சந்தித்தாலும் பட்டேல் தேசிய ஒருமைப்பாட்டின் மீதான பார்வையில் இருந்து எப்போதும் விலகியதில்லை. நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்ட அவருடைய பிறந்த நாளன்று 30 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்றதொரு துயரமான சம்பவம் நடந்தது, துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும்.
இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்ததும் அது மேலும் பல்வேறு பகுதிகளாக பிளவு படவேண்டும் என்று ஆங்கிலேயேர்கள் விரும்பினார்கள்.
ஆனால், பட்டேலின் சாணக்கியம் பிரிந்து கிடந்த பகுதிகளையெல்லாம் ஒன்றாக்கியது. நாட்டில் இருந்த 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை அவர் ஒன்றாக இணைத்து மிகப்பெரிய சாதனையை படைத்தார்.
பட்டேல் இன்றி காந்தி இல்லை
மகாத்மா காந்திக்கும், பட்டேலுக்கும் இருந்த பாசப் பிணைப்பு மிகவும் உறுதியானது. காந்தியின் தண்டி யாத்திரை வெற்றிகரமாக நடந்தேறுவதற்கு திட்டமிட்டுத் தந்தவர், வல்லபாய் பட்டேல் ஆவார்.
எப்படி விவேகானந்தர் இன்றி ராமகிருஷ்ண பரம்ஹம்சர் முழுமை அடைந்து இருக்க மாட்டார் என்று நமக்கு தோன்றுகிதோ, அதேபோல் வல்லபாய் பட்டேல் இல்லாமல் மகாத்மா காந்தி முழுமை அடைந்து இருக்க மாட்டார் என்றே நமக்குத் தோன்றுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக டெல்லி பட்டேல் சவுக்கில் உள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலியும் செலுத்தினார்.
ஜனாதிபதி மாளிகையில் விழா
இதேபோல் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலை நேற்று 8.15 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள், ராணுவ படையினர் மற்றும் டெல்லி போலீசார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment